தேவ்யானி கோப்ரகாடே கதை
தேவ்யானி கோப்ரகாடே கதை - எ.அ.பாலா
IMF நிறுவனத்தின் தலைவராக இருந்த (பிரதமராக வாய்ப்பிருந்த) பிரென்ச் நாட்டு ஸ்ட்ராஸ் கானை, சாதாரண ஒரு ஓட்டல் சிப்பந்தியின் சாதாரணப் புகாரின் பேரில், விமானத்திலிருந்து இறக்கி, பொது இடத்தில் விலங்கு மாட்டி கூட்டிச் சென்றதும் இதே அமெரிக்காவில் தான் நிகழ்ந்தது. இந்தியாவில் ஒவ்வொரு sexual harassment கேஸிலும், பல நாட்கள்/வாரங்கள் கழித்து, மீடியா கூத்துகளின் முடிவில் தான் சம்பந்தப்பட்ட நபர் மீது ஏதாவது நடவடிக்கை எடுக்கப்படும்! எ.கா: தருண் தேஜ்பால். அமெரிக்காவில், ஒரு இல்லினாயி கவர்னர், ஜெஸ்ஸி ஜாக்ஸன் ஜூனியர், மைக்கல் டக்லஸ் மகன் என்று பல விவிஐபிகள், நம்மூர் லெவலில் ”சின்ன” குற்றங்களுக்காக சிறையில் காலம் தள்ளுகிறார்கள். இது போன்றதை இந்தியாவில் நினைத்துக்கூடப் பார்க்க முடியாது, ஒன்றிரண்டு exceptions இருக்கும் போதிலும்! தேவ்யானி கைது நடவடிக்கையால், இங்கு சிலபலரின் ரத்தம் கொதிப்பதற்கு இது தான் முக்கியக் காரணம்.
தேவ்யானியின் Diplomatic Immunity பற்றிப் பேசும் இந்திய அரசு, பாலியல் குற்றத்துக்காக, ப்ரென்ச் தூதரக அதிகாரி பாஸ்கலை, நிர்வாணச் சோதனைக்கு உள்ளாக்கி, ஜெயிலில் போட்டது. இத்தாலியத் தூதரை வீட்டுக்காவலில் வைத்து நாட்டை விட்டு நகரக்கூடாது என்று கட்டளையிட்டது! அதாவது, (அந்தந்த நாட்டில்) தீவிரமாக கருதப்படும் குற்றங்களை மனதில் வைத்து Diplomatic Immunity-ஐ பார்க்க வேண்டும். அமெரிக்க நீதிமன்றங்கள், தொழிலாளர் ஊதிய முறைகேடுகள் சார்ந்த குற்றங்களை தீவிரமானதாக பார்க்கின்றன. அடுத்து, சி.ஐ.ஏ ஏஜெண்ட் ரேமாண்ட் டேவிஸ் 2 பாகிஸ்தானியர்களை சுட்டுக் கொன்றதைச் சுட்டிக்காட்டி, அமெரிக்காவின் இரட்டை வேடத்தை தோலுரித்ததாக சிலர் கூறுவதையும் தமாஷாகத் தான் எடுத்துக் கொள்ள வேண்டும். பாகிஸ்தானிய சட்டப்படி, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு பிளட் மனி (Blood money) வழங்கப்பட்டதின் தொடர்ச்சியாகத் தான் டேவிஸ் தண்டனையிலிருந்து தப்ப முடிந்தது.
தேவ்யானி கேஸின், அமெரிக்க பப்ளிக் பிராசிக்யூட்டர் ப்ரீத் பராரா மேல் கொதித்தெழுந்து வசை பாடும் பலர், அதே ஆள் தான், மில்லியன்களைச் சுருட்டிய கள்ளப் பேர்வழிகள் ராஜரத்னத்தையும், ரஜத் குப்தாவையும் உள்ளே தள்ள காரண கர்த்தாவாக இருந்த நேர்மையாளர் என்பதையும் எண்ணிப் பார்க்க வேண்டும். அதே போல, அழுக்கு ஆதர்ஷ் கட்டடத்தில் (தகிடுதத்தம் பண்ணி வாங்கிய) ஒரு ஃப்ளாட் வைத்திருக்கும் தேவ்யானி, தனது பணியாளர் சங்கீதாவை ஏமாற்றி அமெரிக்காவுக்கு வீட்டு வேலைக்கு அழைத்து வந்திருக்க வாய்ப்பும் பிரகாசமாக உள்ளது என்பதையும் எண்ணிப்பார்க்க வேண்டும்! அதோடு, தேவ்யானி தலித் என்பதால் தான், இந்திய அரசு (இன்னும்) அதி விரைவாக அமெரிக்காவுக்கு எதிராக செயல்படவில்லை என்று மாயாவதி கூறியிருப்பதை வடிவேலு காமடியாக மட்டுமே பார்க்க வேண்டும் :)
சங்கீதாவுக்கான இலவச தங்கும் இடம், விமான கட்டணம் ஆகிய செலவுகளையும் அவரது ஊதியத்தின் ஒரு பகுதியாக பார்க்கவேண்டும் என்று சில புத்திசாலிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். பிரச்சினை அது அல்ல. தெரிந்தே சட்டத்துக்கு முறைகேடாக ஒரு தூதரக அதிகாரி நடந்து கொண்டது தான் பிரச்சினை. இதற்கு முன்னும், பணியாளர் ஊதியம் தொடர்பாக 2 இந்திய தூதரக அதிகாரிகள் மீது புகார் எழுந்தும், பிரச்சினை பெரிதாகவில்லை. சங்கீதாவின் குடும்பத்துக்கு விசா, டிக்கெட் வாங்கிக் கொடுத்து, அவர்கள் அமெரிக்கா சென்ற பின் தான், தேவ்யானி கைது நிகழ்ந்தது என்று ஒரு குற்றச்சாட்டு! ஆமாம், திட்டம் போட்டுத் தான் அமெரிக்கர்கள் செய்துள்ளனர். ஏனெனில், இந்திய சட்டத்தையும் வளைக்க முடியும், ஓட்டைகளும் உள்ளன.
முக்கால்வாசி வழக்குகளில், குற்றம் சாட்டப்பட்ட முக்கியமான ஒருவரே, சாட்சிக்கு வேண்டி அப்ரூவர் ஆகி விடுவது தொன்று தொட்டு ஒரு வழக்கமாக இங்கு நிலவுகிறது! பணம், பதவி பலத்தினால் சங்கீதாவின் குடும்பம் இங்கே அலைக்கழிக்கப்படக்கூடாது என்பதற்காகத் தான் அவர்களை அப்புறப்படுத்த வேண்டியிருந்தது. சாட்சி பாதுகாப்பு (Witness protection) என்பதை அமெரிக்கா தீவிரமாக கடைபிடிக்கும் ஒரு நாடு. தேவ்யானியை நிர்வாணச் சோதனைக்கு உட்படுத்தியது 100% உண்மையா என்று தெரியவில்லை. ஆனால், இந்தியாவில், யாரை (விஐபிகள் தவிர்த்து!) வேண்டுமானாலும், சந்தேகத்தின் பேரில், போலீஸ் தொட்டுச் சோதனை இடுவதும், கடுமையாகப் பேசுவதும் சாதாரணமாக நடக்கும் விஷயம் தான்! அமெரிக்க ஹிப்பக்ரஸி பற்றி பேசுவதற்கு முன் இந்திய ஹிப்பக்ரஸிகளையும் (இவற்றை அலசினால் விடிந்து விடும்!) நினைத்துப்பார்த்தல் நலம் பயக்கும்! தேவ்யானி கைதுக்கு எதிராக, அமெரிக்க தூதரகத்தின் பாதுகாப்பு அரண்களை நீக்கியது போன்றவை இந்தியாவுக்கு மரியாதை தரும் விஷயங்கள் அல்ல.
தன் மேல் அமெரிக்க நடவடிக்கையை தடுக்கும் விதமாக (நினைத்துக் கொண்டு!) தேவ்யானி, இந்திய நீதிமன்றத்தில் சங்கீதாவுக்கு எதிராக வழக்கொன்றை பதிவு செய்து வைத்தார். ஆனால், கைதை எதிர்பார்க்கவில்லை! அது தான் உண்மை. தற்போதைய சூழலில், நீதிமன்றத்துக்கு வெளியே சமரசம் செய்து கொண்டு,தேவ்யானி அமெரிக்காவிலிருந்து வெளியேறுவது தான் பிரச்சினையை சுமுகமாக முடிவுக்கு கொண்டு வர உதவும்.
இப்போது தேவ்யானிக்கும் முன்னால் ஷாருக் கானுக்கும் ஆதரவாக கொடி பிடித்த இந்திய அரசு, அதே அளவுக்கு அப்துல் கலாம் விஷயத்தில் நடந்து கொள்ளவில்லை. மேலும், ஒரு இந்திய மீனவர் துபாய் அருகில் அமெரிக்க கடற்படையினரால் அநியாயமாக சுட்டுக் கொல்லப்பட்டபோது இந்தியா இத்தனை ஆர்ப்பாட்டம் செய்யவில்லை. இறுதியாக, தமிழக மீனவர்களுக்கு எதிராக இலங்கை அரசு பல ஆண்டுகளாக செய்யும் கொடுமைகளை இந்திய அரசோ, பிற இந்தியர்களோ வலிமையாக தட்டிக்கேட்டதே கிடையாது என்று தாராளமாகக் கூறலாம்! அமெரிக்கா போல இலங்கை, இந்தியாவின் மிக முக்கியமான ராணுவ / தொழில் கூட்டாளி நாடு இல்லை என்பது குறிப்பிட வேண்டிய விஷயம்!